Wednesday, January 17, 2007

யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீதிமன்றத்திற்கு வருகிறது.

2002ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி கையொப்பமிடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நாட்டின் அரச சாசனத்திற்கு முரணாக உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன், ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தொடுத்த வழக்கு, மார்ச் 6ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

சிறீலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுமா என்பதற்கான தீர்வை, மார்ச் 6ம் திகதி தான் வழங்கவிருப்பதாக, மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் உருவாக்கிய இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம், சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகார உத்தரவு பெறப்படாமல் கைச்சாத்திடப்பட்டதால், இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட அந்தஸ்தை நீக்கி, சிறீலங்கா அரச சாசனச் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பு வழங்குமாறு ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய கட்சிகள் கோரியுள்ளன.
அரச சாசன சட்டவிதிகளின்படி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் உரிமை இருக்கவில்லை என்பதால், இந்த ஒப்பந்தத்தை செல்லாது என்று நிராகரிக்கும்படி கோரப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவரது அமைச்சரவையில் அப்போது இருந்த அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சுனாமி நிவாரணத்திற்கான பி-ரொம்ஸ் திட்டப் பிரேரணை, வடக்கு கிழக்கு இணைப்பு போன்றன உட்பட, நாட்டின் பல முக்கிய விடயங்களும், தமிழினத்திற்கு எதிராகத் திருப்பப் படுவதற்கு, உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி வரும் சிங்கள இனவாத அரசு, இப்போது சர்வதேச அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் நீதிமன்றத்தின் மூலம் முடக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: